இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளை அதிகரிக்க துறைமுகம் மற்றும் விமான நிலையம் தயாராக உள்ளன என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் வழங்கிய தகவலின் படி அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த உண்மைகளை கவனத்தில் கொண்டு துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் வசதிகளை அதிகரிக்குமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த திட்டமிட்ட முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறைமுகம், விமான நிலையம், சுங்க மற்றும் குடிவரவு முகாமை அதிகாரிகளுடன் அமைச்சர் இன்றைய தினம் (11ஆம் திகதி) அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன், அதன் பின்னர் துறைமுகத்தில் கள ஆய்வொன்றிலும் ஈடுபட்டார்.
இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் 08 கப்பல்களும், 10 பயணிகள் கப்பல்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வந்தடைய உள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து 2800 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 1500 பணியாளர்கள் அடங்கிய கப்பலும், ஓமானில் இருந்து 3500 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய கப்பலும் இம்மாதம் வர உள்ளன.
எனவே, அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுங்க மற்றும் குடியேற்ற சேவைகளை வழங்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் கவுன்டர்களை நிறுவவும், வரியில்லா விற்பனை நிலையங்களின் சேவைகளை அதிகரிக்கவும், பிற சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் மற்றும் களப்பயணத்தின் போது அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் டி. பர்னார்ட், குடிவரவுத் துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் எச். இலுக்பிட்டிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.