கொழும்பு,நவ 11
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.
இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.
மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.