கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த ‘அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு’ குறித்த செயலமர்வு, கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில் நேற்று நடைபெற்றது.
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும் தொடர்பாக பல சந்தேகங்களுக்கான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் மாகாண சபைகளுக்கான அமைச்சின் செயலாளர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,
“அபிவிருத்தியும் அதிகார பகிர்வும் தொடர்பாக பலருக்கு சந்தேகம் உள்ளது. அதிலும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன.
அவர்களுக்குப் பிழையான கருத்துக்கள் இனவாதிகளினால் ஊட்டப்படுள்ளன. அவை தொடர்பான விளக்கங்களையும் தெளிவூட்டல்களையும் வழங்குவதற்கென இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதுமாகக் காணப்படும் அரசில் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் இவற்றினூடான பொருளாதார அபிவிருத்தி என்பன சம்பந்தமாகச் சேவையாற்றும் 280 அமைப்புக்களை மிக விரைவாகவும் துரிதமாகவும்சந்தித்து இவ்வாறான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” – என்று தெரிவித்தனர்.