நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்வதற்கான திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விடயத்தில் ஊடகங்கள் மிக மோசமாக செயற்படுவதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தொடர் பான திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ரோஹினி குமாரி கவிரத்ன எம். பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
நாட்டில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக வழக்குகள் பல நீண்டகாலமாக நிலுவையில் காணப்படுகின்றன.
எனக்கு முன்னர் இருந்த நீதி அமைச்சர்கள் இவ்வாறான வழக்குகளை துரிதமாக நிறைவு செய்ய கடின முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் அதில் முழுமையான வெற்றிபெறவில்லை.
அதனைக் கவனத்திற் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான துஷ்பிரயோக வழக்குகளை விசாரணை செய்வதற்காக பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளைப் பொறுத்த வரை ஒரு வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது அது தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கும் விதிமுறை நடைமுறையில் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை செய்திகளை வெளியிடக் கூடாது என சிட்னி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறான உத்தரவுகள் மூலம் 22 வருடத்திற்கு மேலாக வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட முடியாத நிலை அங்கு காணப்படுகிறது.
அதேபோன்று இலங்கையிலும் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விட யங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட தடை விதிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.