பெஷாவர்,நவ 12
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் உள்ள மர்தான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதை தொடர்ந்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்த பயங்கரவாதி போலீசாரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மெஹ்முத் என்கிற ஒபைத் என்பது தெரியவந்தது. மர்தான் மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஒபைத் தலைக்கு கைபர் பக்துங்வா மாகாண அரசு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.