கட்சி அரசியலுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இறுதி மூச்சுவரை எம்முடன் நல்லுறவுடன் செயற்பட்ட துரைரட்ணசிங்கம், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்டு எம்மோடு இணைந்து செயற்பட்ட வணக்கத்துக்குரிய பத்தேகம சமித்த தேரர் போன்றோர் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான (வண). புத்தேகம சமித்த தேரர், கே. துரைரட்ணசிங்கம், டீ.பீ. ஏக்கநாயக்க, சந்திரகுமார விஜய குணவர்தன ஆகியோரது அனுதாபப் பிரேரணை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அமரத்துவம் அடைந்த கௌரவ பத்தேகம சமித்த தேரர் அவர்கள், தமிழ் மக்கள் மீதான குரோதமானதும், இகழ்வானதுமான பார்வை இனவாத சக்திகளினால் தென்பகுதியில் உருவாக்கப்ட்டிருந்த காலத்தில், அத்தகைய பார்வைகளை ஊடறுத்து, நல்லிணக்கத்தின் ஒளியினை எம்மோடு இணைந்து பாய்ச்சியவர்களுள் முக்கியமான ஒருவர் என்றே கூற வேண்டும்.
அதேபோன்று, 1983ஆம் ஆண்டு நடைபெற்ற கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதியின் இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரவேசம் கண்ட சட்டத்தரணி, சந்திரகுமார விஜய குணவர்தன மற்றும் குருணாகலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற பிரவேசம் கண்டிருந்த கௌரவ டீ.பீ. ஏக்கநாயக்க ஆகியோரும் மக்களின் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில் தமது அரசில் பணிகளை மேற்கொண்டிருந்தனர்” என்று குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது