இலங்கையில் வங்கிகளில் கடன்பெற காத்திருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் தங்கள் கடன் வட்டி வீதத்தை மேலும் 4 சதவீதம் உயர்த்தியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், சில வங்கிகளின் கடன் வட்டி வீதம் 32%ஆக உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது.
இருப்பினும், பொது வங்கிகளுடன் ஒப்பிடுகையில் சில தனியார் வங்கிகளின் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ள போதும் கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை வங்கி வட்டி அதிகரிப்புடன், முழு வங்கி முறையிலும் திருப்பிச் செலுத்த முடியாத கடன்களின் அளவு வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி பத்திரங்களுக்கு செலுத்தப்படும் வருடாந்த வட்டி 31 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உள்ளதென மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் பொது மற்றும் தனியார் வணிக வங்கிகளின் நிலையான வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு ஒப்பீட்டு வட்டியை செலுத்துவதில்லை என்றும் பல சிரேஷ்ட குடிமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெரும்பாலான வணிக வங்கிகள் இப்போது நிலையான வைப்புத்தொகைக்கு 25 சதவீதத்திற்கும் குறைவான வட்டியை வழங்குகின்றன.
ஆனால் அவர்களின் கடன் அல்லது வங்கி அதிக பற்று வசதி வழங்கும் போது 35 சதவீதத்திற்குக்கும் அதிகமான வட்டி வசூலிக்கிறார்கள் எனவும் தெரியவந்திருந்தது. கடன் அட்டைகளுக்கான வட்டி 36 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை நியாயமற்றது எனவும், நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு நியாயமான வட்டியை அரச வர்த்தக மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட வேண்டும் எனவும் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.