“நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய கும்பல் வெளியில் இருந்து புத்தகம் எழுதுகின்றது. ஆனால், நாட்டை மீட்கப் போராடிய இளைஞர்கள் சிறையில் வாடுகின்றனர்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ‘பொருளாதாரக் கொலையாளிகளுக்கு மத்தியில்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்துக்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு விசித்திரமான நிலை.
நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன் நின்ற சில பிரதான தலைவர்களில் முன்னிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும் போது, இந்த நாட்டைப் பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதாரக் குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே உள்ளிட்டோரைச் சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல்?
பொருளாதாரக் குற்றத்தைச் செய்த கும்பலே சிறையில் இருக்க வேண்டும். ஆனால், பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடியக் குழுவைச் சிறையில் அடைக்கும் நிலையே நடந்திருக்கின்றது.
நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருகின்றனர். அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடுகின்றது” – என்றார்.