யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 12 ஆம் திகதி, சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அவை அறையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் நிதிமுகாமைத்துவத் துறையும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் இணைந்து எதிர்காலத்தில் நிதிமுகாமைத்துவ மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஏற்பாடுகளுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் சார்பில், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்கவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
நிகழ்வின் போது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் சட்ட அலகின் தலைவர் றேணு ரணதுங்க, யாழ். கிளை முகாமையாளர் எஸ். சபாநந்தன், சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பிரதித் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர, கிளை வலையமைப்பு முகாமையாளர் நிஷாந்த பட்டேகல மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஷானிகா ராமநாயக்க ஆகியோரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிதிமுகாமைத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர். யோகேந்திராஜா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி,
1. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிதிமுகாமைத்துவத் துறையினால் ஒருங்கமைக்கப்படும் முதலீட்டுச் சந்தை தொடர்பான மேம்படுத்தல் நிகழ்வொன்றை நடீத்துவதற்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வருடாந்தம் ரூபா 200,000.00 நிதிப் பங்களிப்பை வழங்கும்.
2. ஒவ்வொரு ஆண்டிலும், நிதிமுகாமைத்துவ சிறப்புக் கற்கைநெறியில் அதியுயர் மதிப்பெண்ணைப் பெறும் மாணவன் அல்லது மாணவிக்கு கொழும்பு பங்குப் பரிவர்த்தனையினால் விருதொன்று வழங்கப்படும்.
3. நிதிமுகாமைத்துவத் துறை மாணவர்களின் கற்றல் மற்றும் உள்ளகப் பயிற்சி நடவடிக்கைகளில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும், நிதிமுகாமைத்துவத் துறையும் இணைந்து செயற்படுதல். இயலளவிலான வெற்றிடங்களுக்கு அமைய கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் நிதிமுகாமைத்துவத் துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.
4. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வாணிப இணைப்பு அலகுக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகளுக்கென நிதிமுகாமைத்துவத் துறையினால் இணைப்பாளர் ஒருவரை நிமித்தல்.
5. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையினால் நடாத்தப்படும் நிதிச் சந்தையியல் உயர் தகமைச் சான்றிதழ் (Advanced Diploma in Financial Markets ) கற்கை நெறிக்கான வளவாளர்களை வழங்குவதற்கும், கற்கை நெறிக்கான விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்குமான ஆதரவை நிதிமுகாமைத்துவத் துறை வழங்குதல்.
6. நிதிமுகாமைத்துவத் துறையினால் முதலீட்டுச் சந்தை தொடர்பான கற்றல் நடவடிக்கைகளுக்காக செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடாத்துவதற்கு இரு தரப்பாரும் இணங்கி – இணைந்து செயற்படுதல்.
7. முதலீட்டுச் சந்தை தொடர்பான கற்றல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுதல்.
ஆகிய முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.