பெண் அளித்த புகாரை தொடர்ந்து, 78 வயதான தென்கொரிய நடிகர் ஓ யோங்-சு மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரபலமான தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்தவரும், தென் கொரிய நாட்டைச் சேர்ந்தவருமான ஓ யோங்-சு மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அந்த வகையில், தற்போது இவர் மீதான பாலியல் வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் ஓ யோங்-சு மீது குற்றஞ்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முடித்துவைக்கப்பட்டது. தற்போது, பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இப்போது, யோங்-சு தடுப்புக்காவல் இன்றி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை யோங்-சு மறுத்தார்.
இது குறித்து அவர் அளித்த விளக்க குறிப்பில், “ஏரியை சுற்றிகாண்பிக்கும் எண்ணத்தில்தான் நான் அந்த பெண்ணின் கையை பிடித்தேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், கொரிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “நான் மன்னிப்பு கேட்டேன், ஏனெனில் (அந்த நபர்) அதைப் பற்றி பிரச்சனை செய்ய மாட்டேன் என அந்த பெம் கூறினார். மன்னிப்பு கூறியதால், நான் அவரிடம் தவறாக நடந்துகொண்டேன் என ஆகாது” எனவும் விளக்கமளித்துள்ளார்.
அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, அவர் நடித்த விளம்பரங்களின் ஒளிபரப்பை நிறுத்த தென்கொரிய கலாச்சார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
வருடங்களாக நடிப்புத் துறையில் இயங்கி வரும் ஓ யோங்-சு, ஸ்குவிட் கேம் மூலம்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் பல்வேறு தென்கொரிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.