கிழக்கில் இனங்களுக்கு இடையிலான பிணக்குக்கு காரணம் இனவாதம்! அதாவுல்லா

உள்ளூராட்சி சபையை மூடி மறைத்து பிரதேச செயலகத்தை பிரிப்பது அரசியலாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், கல்முனையில் 4 சபைகளாக இருந்த உள்ளூராட்சி சபைகள் அரசியல் காரணங்களுக்காக ஒரு சபையாக பிரகடனப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கல்முனையில் பிரதேச செயலகம் பிரிப்பதை நிறுத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியும்.

சுமார் 100 வருடங்களாக 4 சபைகளாக இருந்த உள்ளூராட்சி சபைகள், 1987ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சியின் போது ஒரு சபையாக பிரகடனப்படுத்தப்படுகிறது.

இதனையடுத்தே, தமிழர், சிங்களவர், முஸ்லிம்களின் இடங்கள் என்ற பாகுப்பாடு கல்முனையில் தோற்றம் பெறுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, 2022ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால்(2020ஆம் ஆண்டு) சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபை உருவாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அத்துடன், ஏனைய பகுதிகளுக்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு நிர்ணயிக்கப்பட்டு, எத்தனை சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

எனினும், ஒருசில காரணங்களால் அது அமுலுக்கு வராமல் பிற்போடப்பட்டது.

சாய்ந்தமருதுக்கான சபையையும், கல்முனையின் தமிழ் மக்களுக்கான சபையையும், மருதமுனைக்கான சபை உள்ளிட்ட ஏனைய மாநகர சபைகளை மீண்டும் வழங்கினால் எல்லை பிரச்சனை தீர்ந்து விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *