நாம் மீண்டும் ஆயுதம் தூக்கினால் நீங்கள் தப்புவீர்களா? தமிழ் அரசியல்தலைமைகளிடம் இன்பராசா கேள்வி!

நாளைக்கே நாம் ஆயுதம் தூக்கவேண்டி வந்தால் நீங்கள் தப்புவீர்களாக என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா கேள்வி எழுப்பினார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

\
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர்கள் வேறு அமைப்புக்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களில் ஒருவரே மாவீரர். யுத்தத்தில் இறந்தவர்கள் மாவீரர்களாகவும் தப்பி இன்று உயிருடன் இருப்பவர்கள் முன்னாள் போராளிகளாகவும் உள்ளனர்.

ஆனால் இன்று நாம் வேதனைப்படுபவர்களாக மாறியுள்ளோம். எங்கள் தோல்களில் தூக்கி சுமந்து மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டவர்களுக்கும் காடுகளில் பல சந்தர்ப்பங்களில் மாவீரர்களாகியவர்களுக்கும் அகவணக்கம் செலுத்த முடியாதவர்களாக உள்ளோம்.

இன்று சில அரசியல்வாதிகள் எங்கள் மாவீரர்களுக்கான நிகழ்வுகளை எங்களை செய்ய விடாமல் தாங்கள் சென்று அதில் அக்கறை செலுத்துவது வேதனையளிக்கின்றது. சம்பூர் துயிலும் இல்லத்தின் காணி உறுதிகளை அந்த மக்களுடன் கலந்துரையாடி பெற்று துப்பரவு செய்வதற்கு முனைப்பு காட்டியிருந்தேன். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளும் முகவர்களும் எங்களை அரசியல்வாதிகள் என தெரிவித்து வெளியே செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அழுதோம். வேதனைப்பட்டோம். இதனால் நாங்கள் ஒதுங்கியிருந்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சட்டைப்பையில் இருந்து 1000 ரூபா செலவு செய்யமாட்டார். அவ்வாறான தலைக்கணம் மிக்கவர்களுக்கு 50 இலட்சம் வந்தால்தான் 10 இலட்சத்திற்கு வேலை செய்வார்கள். புலம்பெயர் தேசத்தில் இருந்து சிலர் இவர்களுக்கு பணத்தை கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் துயிலும் இல்லத்தில் வேலை செய்வதை பார்த்து வேதனைப்படுகின்றோம். 

யுத்தத்தில் ஈடுபட்ட நாம் ஒதுங்கியிருக்க இவர்கள் போய் நிற்கின்றார்கள். இவர்களே முன்னாள் போராளிகள் இராணுவ புலனாய்வுடன் தொடர்பு அவர்ளிடம் பணம் வாங்குவதாக குற்றம்சாட்டி விட்டு தாம் முன்னிற்கின்றனர்.

 
தமிழ் அரசியல்வாதிகள் எமது போராளிகளை குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் எங்களிடம் என்ன இருக்கின்றது. அவர்களே எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து எம்மை வீதியில் விட்டார்கள். நாம் இறந்துபோகும் நிலையிலேயே இருக்கின்றோம்.

 
புலம்பெயர் தேசத்தில் உள்ள சில போராளிகளும் போராட்டத்தில் போராளிகள் பட்ட கஸ்டத்தினை அறிந்திருந்தும் அரசியல்வாதிக்கே பணத்தை கொடுக்கின்றனர். நிகழ்வுகள் செய்வதற்கு உதவி செய்கின்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைவரும் வீரச்சாவடைந்திருந்தால் புனர்வாழ்வளிக்க எவரும் இல்லாமல் இருந்திருந்தால் எமது வரலாறே இல்லாமல் போயிருக்கும்.. ஆனால் இன்று எம்மை துரோகிகள் என்கின்றீர்கள். நாங்கள் யுத்தம் செய்யும் போது நீங்கள் எங்கு போய் இருந்தீர்கள். உங்கள் பெயர்களையே நாங்கள் கண்டதில்லை.

 
எங்கள் மாவீரர்களுக்கு நாங்கள் விளக்கேற்றும்போதே அவர்களின் ஆத்மா சாந்தியடையும்.. எங்களோடு இருந்த போராளிகளை நாங்களே ஒருகணம் சிந்திப்போம். அப்போதுதான் அவர்களின் ஆத்மா சாந்தியடையும். அவ்வாறான நிலையில் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றால் அனைத்து அரசியல்வாதிகளும் வந்து எங்களை நாய்கள் போன்று கலைக்கின்றீர்கள். எங்களை அரசியல்வாதி என்று கலைத்து நீங்கள் எல்லாம் தேசியவாதிகள் என்று கூறி உள்ளே நிற்கின்றீர்கள்.

ரி.சி.சி அமைப்பில் இருந்து கஜேந்திரகுமாருக்கு போதிளவு பணம் வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும். இதேவேளை இந்த அமைப்புகளுக்கு கூறுகின்றோம். நீங்கள் அரசியல்வாதிகளை வளர்த்து செல்லுங்கள். ஆனால் எங்கள் மாவீர்களை நினைவு கூறுவதற்கு இனி வரும் காலங்களில் புலத்தில் உள்ள விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அங்கீகாரத்தினை கொடுக்க வேண்டும்.

 
மாவீரர்நாளை போராளிகளும் மாவீரர் பெற்றோரும் செய்யும் போது இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் ஏற்படும் இடையூறுகளை களைவதற்காக அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யாமல் துயிலும் இல்லத்தில் நின்று புல்லு கொத்திக்கொண்டு; பொலிஸாருடன் சண்டித்தனமும் செய்துகொண்டிருக்கின்றார்கள். உங்கள் சண்டித்தனங்கள் எங்களுக்கு நிகராகாது. நீங்கள் பொலிஸாருக்கு கை வைக்க முடியாது. ஆனால் நாங்கள் சில வேளையில் பொலிஸாருக்கு கை வைத்துவிடுவோம். எங்களை மீறி எங்களுக்குள் ஒரு சக்தி உள்ளது. ஆனால் நாங்கள் பொறுமையாக உள்ளோம்.

இன்று துயிலும் இல்லத்திற்கு முல்லை ஈசனை அழைத்து செல்கின்றனர். அவர் போராளியாக இருந்திருந்தால் வேதனை தெரிந்திருக்கும். கூட்டமைப்பு மாகாணசபைக்கு முல்லை ஈசனை களத்தில் இறக்கவே அழைத்து செல்கின்றது. இதை பார்த்துக்கொண்டிருக்க நாங்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.

 
எங்கள் மாவீரர்களுக்கு நாங்கள் நினைவு தினம் செய்யாமல் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் செய்து இன்று அரசியல்மயமாகிவிட்டது. தயவு செய்து எமது மாவீரர் விடயத்தில் அரசியல்வாதிகள் அரசியலாக்காமல் ஒதுங்கியிருந்து எமக்கு பக்கபலமாக இருங்கள். போராளிகள் அமைப்புக்களையும் போராளிகளையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் செய்ய விடுங்கள்.

 
கொழும்பில் உள்ள சம்பந்தரின் வீட்டில் சில தீர்மானங்களை எடுத்துள்ளனர். ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசவுள்ளதாகவும் அறிந்தோம். இந்த வியடத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் ஒரு விடயத்தை செல்லிக்கொள்ள விரு;புகின்றேன். அதாவது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒருசில அரசியலே இங்கு தற்போது உள்ளது. இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே விடுதலைப்புலிகளில் நல்ல அரசியல்வாதிகள் இருந்தார்கள்.

 
எனவே சம்பந்தர் மற்றும் கூட்டமைப்பினர் ஏனைய அரசியல்கட்சிளை இணைத்து சில தீர்மானங்களை எடுக்கும் போது விடுதலைப்புலிகள் சம்பந்தமான அமைப்புக்கள் கட்சிகள் புலம்பெயர் தேசத்தில் உள்ள விடுதலைப்புலிகள் சம்பந்தமான அமைப்புக்கள் சிவில் அமைப்புக்களையும் இணைத்து முடிவெடுக்க வேண்டும். தனித்து அரசியல்வாதிகள் நீங்கள் மட்டும் முடிவு எடுக்க முடியாது.

 
நாங்கள் யுத்தம் செய்யவேண்டும் நீங்கள் ரணிலுடனும் மகிந்தவுக்கும் ஆதரவாக தீர்மானம் எடுத்தால் நாங்கள் சம்மதிப்பதா? சில வேளை நாளைக்கே நாங்கள் ஆயுதத்துடன் இறங்கினால் நீங்கள் தப்புவீர்களா? எங்களுக்க 1000 பேர் தேவையில்லை. 10 பேர் போதும் வடக்கு கிழக்கை கெரில்லா போரால் கரைத்து குடிப்போம். உங்களுக்க எதிராகவே நாங்கள் எதனையும் செய்வோம். கட்டாயமாக செய்வோம். எனவே அந்த நிலைமைக்கு எங்களை தமிழ் அரசியல்வாதிகள் தள்ளக்கூடாது.

 
வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து போராளிகளையும் அவர்களின் அமைப்புக்களையும் சிவில் அமைப்புக்களையும் அங்கீகரியுங்கள். அவர்களையும் இணைத்து முடிவெடுத்து அதனை அரசாங்கத்திடம் முன்வையுங்கள்.

75 வருடமாக அரசியல் செய்து நீங்கள் என்ன செய்தீர்கள். காலம் கடந்துவிட்டது ஏமாற்றப்பட்டோம் என்றுதான் இத்தனைவருடமாக கூறுகின்றீர்கள். இதனால்தான் நாம் ஆயுதம் தூக்கினோம். இனி எதிர்கால சந்ததியையும் ஆயுதம் தூக்க வைக்கப்போகின்றீர்களா? மக்களை ஏமாற்றவும் ஒரு எல்லை உள்ளது. அரசியல் என்பதால் சாகும் வரைக்கும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *