எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம்,நவ 27

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமகால நிலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தரப்புகள் எவ்வாறு சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டார்களோ, அதே போன்று தமிழ் பேசும் மக்களின் ஆணையை பெற்றுவிட்டு அதற்கு மாறாக செயல்படும் தரப்புகளை மக்கள் விரட்டியடிக்க முன்வர வேண்டும்.

எந்தவிதத்திலும் தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளையோ, தமிழ் தேசிய அங்கீகாரத்தையோ அல்லது தனித்துவமான இறைமையையோ வடகிழக்கில் சுயநிர்ணயத்தை அனுபவிக்க கூடிய சமஷ்டி தீர்வையோ வழங்குவதற்கு தயாரில்லாத இடத்தில் சமஸ்டி என்ற கொள்கையை ஏற்க முடியாது.

அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன் தரப்புக்கோ ஆசனங்கள் குறைவாக கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்ற மாபெரும் துரோகத்தை அடுத்த தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்ற சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கே அவர்கள் அவரசமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா என்னுடன் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தாரே தவிர வேறு எந்த சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
தேர்தலுக்குச் சென்றால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் தங்களுக்கு அங்கீகாரம் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக மக்கள் ஆணையுள்ள தரப்புக்களுடன் கலந்துரையாடி அவர்களது ஆதரவு தனக்கு இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்” என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *