வாட்ஸ்-அப் பயனர்களின் செல்போன் எண்கள் ஆன்லைனில் விற்பனை?- வெளியான அதிர்ச்சி அறிக்கை

வாஷிங்டன், நவ 27

உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.

குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இல்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்கள் என பல வசதிகளை வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்து வருகிறது. இதனால், வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் பயனர்களின் தரவுகள் குறித்த பாதுகாப்பின்மை அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய ஹேக்கர்களின் தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

சைபர்நியூஸ் அறிக்கையின்படி ஒரு ஹேக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வாட்ஸ்அப் பயனர் மொபைல் எண்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் உள்ளன. அதில் 32 அமெரிக்க மில்லியன் மக்களின் தரவுத்தொகுப்பை 7,000 டாலருக்கு (சுமார் ரூ.5,71,690) விற்பனை செய்வதாகத் அந்த ஹேக்கர் தெரிவித்துள்ளார். தற்போது வரை சைபர்நியூஸ் அறிக்கைக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *