உலகில் நீண்டகாலம் ஜனாதிபதியாக பதவிவகித்த ஓபியாங்: மீண்டும் ஆட்சிக்கு

உலகிலேயே அதிக காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற சாதனைக்கு உரித்தான ஈக்குவடோரியல் கினியாவின் ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா Teodoro Obiang Nguema Mbasogo (80) அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் அவர் 95% வாக்குகளைப் பெற்றதாக, வாக்களிப்பு இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் அறிவித்தனர்.

ஜனாதிபதி ஓபியாங் 43 வருடங்களாக வலுவான சர்வாதிகார ஆட்சியினை கொண்டுள்ளார்.

மத்திய ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க ஈக்குவடோரியல் கினியாவில், பல முக்கிய பதவிகளை ஓபியாங்கின் குடும்ப உறுப்பினர்களே வகிக்கின்றனர்.

சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ஈக்குடோரியல் கினியா 1968 இல் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்றது.

அன்றிலிருந்து இரண்டே ஜனாதிபதிகளை மட்டுமே அந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

1979 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலமான ஆட்சிக் கவிழ்ப்பில் ஓபியாங் தனது மாமனாரான பிரான்சிஸ்கோ மசியாஸ் நுகுமாவை பதவி நீக்கம் செய்து ஆட்சிக்கு வந்தார்.

ஓபியாங் எல்லா தேர்தலிலும் 90% க்கும் அதிகமான வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் சர்வதேச நாடுகளும் விமர்சகர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அத்துடன், எண்ணெய் வள நாடாக இருந்தும் நாட்டை வறுமையில் இருந்து மீட்க அவர் சிறிதும் முயற்சிசெய்யவில்லை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லாததால் ஊடகங்கள் கடுமையான சிக்கலை எதிர்கொள்கின்றன.

அத்துடன், அனைத்து ஒளிபரப்பு ஊடகங்களும் அரசாங்கத்திற்கு முற்றிலும் சொந்தமானவையாகவும், அதன் பங்காளிகளால் கட்டுப்படுத்தப்படுபவையாகவும் காணப்படுகின்றன.

முன்னதாக மனித உரிமை மீறல்கள் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனினும் தமது சர்வதேச நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை போக்க எண்ணிய ஜனாதிபதி ஓபியாங், அதற்காக தமது ஆறாவது பதவிக்காலத்தை பயன்படுத்த விரும்பியிருந்தார்.

அதற்கமைய, செப்டம்பரில் அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்தது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டும் பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *