சமஷ்டியை விடுத்து வேறு எந்த தீர்வுக்கும் ஆதரவில்லை – சுகாஷ் திட்டவட்டம்!

இலங்கையினுடைய ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காகவும் பொருளாதார ரீதியாக சீர்குலைந்திருக்கின்ற நாட்டினைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது போல ஒரு நாடகத்தினை ஆடுவதற்கு முற்படுகின்றார்.

இந்த நேரத்தில் தமிழ் கட்சிகள் மிகவும் அவதானத்துடனும், சாதுர்யத்துடனும், சாணக்கியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (26) த.தே.ம.முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய, பேரம்பேசல்களை நாங்கள் முன்வைக்க வேண்டும். அதாவது, சமஷ்டிக்கு குறைந்த எந்தவிதமான தீர்வுகளையும் நாங்கள் ஏற்பதற்கு தயாராக மாட்டோம் என்ற செய்தியை முன்வைத்து, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒற்றையாட்சியைத் தாண்டிய சமஷ்டியை பற்றிப் பேசுவதற்கு தயாராக இருந்தால் மாத்திரம் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு தயார் என்ற அறிவிப்பை விடுவது தான் இந்த நேரத்தில் உசிதமாக இருக்கும்.

மாறாக, நிபந்தனைகளை முன்வைக்காது ரணிலுடன் பேசச் செல்வது என்பது அரசாங்கத்துடைய நாடகத்தில் நாங்களும் பங்காளிகள் ஆவதை குறித்துவிடுமே தவிர இது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் தந்துவிடப்போவதில்லை.

அரசாங்கத்தினுடை நாடகத்தில் நாங்கள் நடிகர்களாக இருக்க முடியாது. ரணில்,. ராஜபக்சகளை காப்பாற்ற வேண்டிய தேவை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடையாது.

சமஷ்டி பற்றி பேசுவதற்கு தயார் என்றால் நாங்களும் தயார். சமஷ்டிக்கு குறைந்த எந்தவிதமான தீர்வுகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்காது.

இதே நிலைப்பாட்டை தான் ஏனைய கட்சிகளும் எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13 பற்றியும், 13+ பற்றியுமே கதைத்திருக்கின்றார். அந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் ரணிலுக்கு உடந்தையாக இருப்பது என்பது தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்கும் என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *