மானிட விடுதலையை நேசித்து தம்மை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள்-ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை!

மானிட விடுதலையை நேசித்து  தமை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள் மாவீரர்நாள் என மாவீரர் நாள் தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமது இனம் வாழ்வுரிமை இழந்து தமது நாட்டுக்குள்ளேயே ஏதிலிகள் ஆக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அகிம்சை முறையிலும் அரசியல் ஊடாகவும் தீர்வுகள் எட்டப்படா நிலையில் தமது சந்ததியாவது இலங்கை தீவில் தங்களது பூர்வீக நிலங்களில் ஆட்சி உரித்துடன் வாழ்வதற்கு தமது இளமை காலங்களை துறந்து உறவுகளை பிரிந்து தமது இன்னுயிரை அர்பணிக்க புறப்பட்ட அற்புதமானவர்கள்தான் எமது மாவீரர்கள். அவர்களின் தியாகங்களையும் மாண்புகளையும் நினைவில்கொள்ளும் புனித நாள்

ஈழத்தமிழினம் இந்த மண்ணிலே தனக்கேயுரிய வரலாற்று மாண்புகளுடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழவேண்டுமெனின் நாம் எமக்கேயான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென திடசங்கற்பம் கொண்டு போராடி தமது இன்னுயிரை இந்த மண்ணிற்காய் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவு கூறும் நாள்

ஜனநாயக ஏதுநிலைகள் தகர்ந்து போனதொருசூழலில் ஓர் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புப் பொறிமுறையை எதிர்கொள்ள ஏந்தப்பட்ட ஆயுதங்கள் ஓர் தேசிய இன விடுதலைப் போராட்டமாக வியாபித்தது.

தாயக விடுதலைக்கான பாரிய அர்ப்பணிப்புக்களுடன், கேள்விக்குரியதான பல தசாப்தங்களை ஈழத்தமிழினம் கடந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக போர் ஒய்வடைந்ததின் பின்னாலான மிகவும் சவால் மிக்க 13 கார்த்திகைகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். 

ஒரு தேசிய இனம் தனக்கான இருப்பை பேணுவதற்கான  மறுதலிக்க முடியா உரிமைக்கு உரித்துடையவர்கள என்ற அடிப்படையில் ஒரு மாபெரும் தேசிய விடுதலை  இயக்கத்தை கட்டமைத்து போராடிய ஈழத்தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை தனது  இராணுவத்தின் வல்லாதிக்கதைக் கொண்டு நசுக்கிய சிங்களம், விடுதலைக்கான எமது  ஜனநாயக முனைப்புக்களையும் புரிந்து கொள்ள மறுக்கின்றது.

அடுத்து வரும் காலங்களை எமது  விடுதலை கருதி நாம் எப்படிப் பயணிக்கப்போகிறோம் என்பது மிகவும் சவாலானது. 

உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவதற்கான முனைப்புக்களைக் காட்டும். பொருளாதாரச் சரிவினின்று மீண்டெழுவதற்காகவும் அரசியல் ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் உலக நாடுகள் போட்டியிடும்.  தேசங்களின்  தற்சார்புத் தேவைகள் மற்றும் உலகப் பொருளாதார ஒழுங்கிற்குமிடையேயான விரிசலானது ஓர் பரிணாமம் பெற்ற பூகோள அரசியல் ஒழுங்கை விஸ்தரிக்கும்.

இந்தப் பூகோள மயப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஈழத்தமிழரின் அர்ப்பணிப்பை அணிதிரட்டுவதோடு,   தாயகத்தின்  தற்சார்புப் பொருளாதாரம், சமூகப் பண்பாட்டியல் மற்றும் மீள்கட்டுமானத்தில் நாம் அதிகமான கவனஞ்செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். 

இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஏதுநிலைகளை தாயகப் பிரதேசத்தின் அரசியல் தலைமைகள் காத்திரமாகக் கையாள்வதற்கான அரசியல் செல்நெறிப்போக்கொன்றை  கட்டமைக்க வேண்டியதன் தார்மீகப் பொறுப்பொன்றை நாம் எடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்வதோடு ஈழத்தமிழினத்தின் எதிர்கால அரசியல் போக்கில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் வகிபங்கினையும் அது ஆற்றக்கூடிய செல்வாக்கினையும் நாம் இதயசுத்தியுடன் நினைவுகூறுகின்றோம். 

உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர் வளங்களை தாயக மேம்பாடு கருதி ஒன்றிணைப்பதுவும், தாயகப் பிரதேசத்தில் புலம்பெயர் முதலீடுகளை ஊக்குவிப்பதும் அவற்றை பாதுகாப்பதும் எமது கடமையாகும். 

இராஜரீக உறவுகள், உலகலாவிய திறன், முதலீடுகள், மனித வளங்கள் மற்றும் தொழிநுட்ப விருத்தி போன்றவற்றில் நாம் கூடிய கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளதோடு தாயகப்பிரதேசத்தின் இடருற்ற மக்கள் மற்றும் போராளிகளினது வாழ்வியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற சிரத்தையோடு நாம் காரியமாற்ற விளைகின்றோம். 

கடந்து வந்த பாதைகளில் நாம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவிலிருத்தி பூகோள அரசியல் ஒழுங்கிணை புரிந்து கொண்டு காரியமாற்றினால் எமக்கான விடுதலை சாத்தியமாகும் என திடமாய் நம்புவோமாக. 

“ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல.

ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *