ஒரே பண்புடைய தீர்வு முன்மொழிவுகளை, ஒரே குரலில் முன் வைத்தால் என்ன? நிலாந்தன்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சம்பந்தரின் இல்லத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் கூடியிருக்கின்றன. அது ஒரு நல்ல சகுனம். அது ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கு முதற் செவ்வாய்க்கிழமை சுமந்திரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்புத்தான். ஆனால் சந்திப்பன்று தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் சம்பந்தரின் வீட்டுக்கு வந்திருக்கவில்லை.அதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் வந்திருந்தன. சிறீகாந்தாவும் வரவில்லை. விடுபட்ட தலைவர்களை அடுத்த சந்திப்புக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இவ்வாறு கூடி ஒரு பொதுத் தீர்வை முன்வைப்பது அவசியம். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் அதை வலியுறுத்துவதுண்டு. இன்னும் ஒரு படி மேலே சென்று அதைத் தமிழ்த் தரப்பின் பலவீனமாகவும் காட்டுவதுண்டு.இது தமிழ்ச் சமூகத்துக்குள் மட்டும் காணப்படும் ஒரு வியாதி அல்ல. ஜனநாயகப் பரப்பில், ஏன் ஆயுதப் போராட்டப் பரப்பிலும் வெவ்வேறு நிலைப்பாட்டுகளைக் கொண்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இருக்க முடியும். ஜனநாயகம் என்பதே அந்த பல்வகைமையின் மீது கட்டியெழுப்பப்படுவதுதான். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை ஒன்றாக இருக்க முடியாத காரணத்தால்தான் அவை பிரிந்து போயின.எனவே அவற்றுக்கிடையிலான பல்வேறு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்று வரும் பொழுது எல்லா கட்சிகளும் வெவ்வேறு தலைப்புகளில் ஏறக்குறைய ஒரே பண்புடைய தீர்வைத்தான் முன்மொழிகின்றன. அவை யாவும் சமஸ்ரிப் பண்புடைய முன்மொழிவுகள்தான். ஆயின் அந்த ஒரே பண்புடைய தீர்வு முன்மொழிவுகளை ஒரு மேசையில் ஒன்றாகக் கூடி இருந்து ஒரே குரலில் முன் வைத்தால் என்ன?

அரகலய போராட்டத்தை நசுக்குவதற்கு தென்னிலங்கையில் உள்ள பாரம்பரிய மிதவாத எதிரிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்த ராஜபக்ஷைகளும்,யூ.என்.பிப் பாரம்பரியத்தில் வந்த ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றாக இணைய முடியும் என்றால், இனப்பிர்சினைக்கான ஒரு பொதுத் தீர்வை முன்வைப்பதற்கு ஏன் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கதைக்கக் கூடாது?

இந்த அடிப்படையில் சிந்தித்தால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்புக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இவ்வாறு தமிழ்த் தரப்பு ஒரே குரலில் ஒரே தீர்வு முன்மொழிவை வைத்துவிட்டு,ரணில் விக்கிரமசிங்கவிடம் தங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியான பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று அறிவிக்கலாம்.ஒரு பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்கு முன்பு பரஸ்பரம் இனங்களுக்கிடையே நல்லெண்ணச் சூழலைக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு பேச்சுவார்த்தைகளுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும்.அப்பேச்சுவார்த்தைகளின்போது இரண்டு முக்கிய விடயங்களைத் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

முதலாவதாக,பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ணச் சூழலை உற்பத்தி செய்வது.ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி. எனவே பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சமூகச் சூழலை ஏற்படுத்தும் பொருட்டு அவர் செய்யவேண்டிய விடயங்களைத் தமிழ்த்தரப்பு முதலில் பட்டியலிட வேண்டும். அண்மையில் அவர் வவுனியாவில் தனது நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்கு என்று ஒரு உப அலுவலகத்தை திறந்திருக்கிறார். தமிழ் மக்கள் கேட்பது வடக்கு கிழக்கில் ஜனாதிபதியின் உப அலுவலகங்களை அல்ல. அரசாங்கம் ஒரு தீர்வைத்தரும் என்று தமிழ் மக்கள் நம்புவதற்குரிய ஒரு சூழலை வடக்குக் கிழக்கில் கட்டியெழுப்ப வேண்டும். இந்த அடிப்படையில் அரசாங்கம் செய்து முடிக்க வேண்டிய காரியங்களைத் தமிழ்த் தரப்பு பட்டியலிட வேண்டும்.அரசியல் கைதிகளை விடுதலை செய்வது; பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது; காணிப் பறிப்பை நிறுத்துவது; பறிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது; காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொருத்தமான நீதியையும் நிவாரணத்தையும் வழங்கும் நடவடிக்கைகளை விசுவாசமாக முன்னெடுப்பது… போன்ற விடையங்களைப் பட்டியலிடலாம்.

இரண்டாவதாக,பேச்சுவார்த்தைகளில் மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தத்தை வலியுறுத்த வேண்டும்.அந்த மூன்றாவது தரப்புக்குள் கட்டாயமாக இந்தியா உள்ளீர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசும்போது வெளியாரின் தலையீடின்றி இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்றும் ஒரு வசனத்தை சொன்னார்.அதை ஏற்கமுடியாது. இனப் பிரச்சினைகள் எல்லாமே சாராம்சத்தில் சர்வதேச பிரச்சனைகள்தான். அவற்றுக்கு சர்வதேசத் தீர்வுதான் உண்டு என்று மு.திருநாவுக்கரசு கூறுவார். இந்த விடயத்தில் இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் தேவை.அதைத் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படும்பொழுது, அதாவது பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியுமிடத்து, அடுத்தகட்டமாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். அவ்வாறு மூன்றாவது தரப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லிம் தரப்புகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்துப் பேசி,முடிவு கட்டி, இறுதி உடன்படிக்கை ஒன்றை எழுத வேண்டும். அதாவது அயர்லாந்தில் எழுதப்பட்ட பெரிய வெள்ளி உடன்படிக்கை போன்று. இந்த விடயம் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு முன்மொழிவில் கூறப்பட்ட விடயந்தான்.

அந்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை உருவாக்கும் பொருட்டு யாப்பை மாற்ற வேண்டும். அதாவது யாப்பு மாற்றம் அல்லது புதிய யாப்பு என்பது தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஓர் அரசியல் உடன்படிக்கை எழுதப்பட்ட பின்னர்தான் உருவாக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வின் கடைசிக்கட்டம் அது.அதுவே முதல் கட்டமாகாது.அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு யாப்புருவாக்க முயற்சியாக மட்டும் சுருக்க இடமளிக்கக்கூடாது. கடந்த ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பு விட்ட தவறு அது.ஓர் அரசியல் உடன்படிக்கையை யாப்புக்குள் கொண்டு வருவதற்குத்தான் ஒரு புதிய யாப்பு தேவை.

கடந்த 13ஆண்டுகளாக அப்படி எந்த உடன்படிக்கையும் எழுதப்படவில்லை.மாறாக போரில் வென்ற தரப்பு தோல்வியுற்ற தரப்பின் மீது தீர்வுகளை அல்லது தீர்வு முன்மொழிவுகளை சுமத்தப்பார்க்கிறது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானமும் அந்த பண்புடையதுதான். அது பொறுப்புக் கூறலுக்கான ஒரு தீர்மானம். பொறுப்புக் கூறல் என்பது நடைமுறையில் நிலைமாறு கால நீதி என்று அழைக்கப்படுகிறது. உலகளாவிய நிலை மாறு கால நீதி அனுபவம் எனப்படுவது தமிழ் மக்களுக்கு சாதகமானது அல்ல.ஏனென்றால் நிலை மாறுகால நீதிப் பொறிமுறை எனப்படுவது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதியாகத்தான் நடைமுறையில் காணப்படுகிறது. எனவே நாடு வென்றவர்கள் தோற்றவர்கள் என்று பிளவுண்டிருக்கும்வரை ஓர் அரசியல் தீர்வைப் பற்றி சிந்திக்கவே முடியாது.ஏனெனில் போரில் வென்றவர்கள் தோற்றவர்கள் மீது திணிக்கும் தீர்வு எதுவும் ராணுவத்தீர்வின் தொடர்ச்சிதான்.

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்று மேற்கு நாடுகளுக்குத் தெரிகிறது. பன்னாட்டு நாணய நிதியத்துக்கும் தெரிகிறது. ஏன் இந்தியாகூட கடந்த ஐநா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அதை வலியுறுத்தியது. எனவே இலங்கைக்கு நிதி உதவி வழங்க முற்படும் தரப்புகள் அந்த உதவிகளை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு நிபந்தனையாக அழுத்தமாக பிரயோக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தத்தின் கீழ் சிங்கள- தமிழ்-முஸ்லிம் பிரதிநிதிகள் ஒர் அரசியல் உடன்படிக்கையை எழுத வேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் உடன்படிக்கையாக அது அமைய வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் இந்த அடிப்படையில் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்கலாம். ரணில் ஒரு புத்திசாலி. இப்பொழுது பலவானாக மாறிவிட்டார். நிறைவேற்று அதிகாரமும் புத்திசாலித்தனமும் இணைந்து விட்டன.வரும் மார்ச் மாதத்தின் பின் ரணில் மேலும் பலமடைவார்.வரும் மார்ச் மாதத்தின் பின் ரணில் நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம். அதாவது தாமரை மொட்டுக் கட்சியின் மீது அவருடைய பிடி மேலும் பலமடையும்.இவ்வாறு பலமடைந்துவரும் ரணில் தமிழ் மக்களை நோக்கி ஒரு பொறியை வைக்கிறார். அவர் பொறி வைப்பதில் வல்லவர்.ராஜபக்சக்கள் பீமன் பொறியை வைப்பார்கள். ரணில் தர்மர் பொறியை வைப்பார். பீமன் பொறி எலியைக் கொன்று விடும்.தர்மர் பொறி சிறைப்பிடித்து விடும்.ரணில் வைக்கும் பொறிக்குள் வீழ்வதா? அல்லது பொறியை உடைப்பதா? அல்லது பொறிக்குள் அவரையே வீழ்த்துவதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *