ரணிலின் தீர்மானம் நாட்டுக்கு உதவாது – விமல் தெரிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக் கொடுக்காது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ‘மேலவை இலங்கை கூட்டணி’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கி போராடினார்கள். போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி கோப்பையை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்துக் கொண்டார்

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிக மோசமான பொருளாதார பாதிப்பை தற்போது நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ளோம். நாடு என்ற ரீதியில் வரலாற்று ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.தற்போதைய நிலையை போன்று கொடிய நிலையை இதற்கு முன்னர் நாட்டு மக்கள் எதிர்கொள்ளவில்லை.

74 ஆண்டு கால அரசியல் பின்னணி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நாட்டுக்கு நன்மை பயக்கும் ஏதேனும் ஒரு சில திட்டங்களையாவது செயற்படுத்தின. ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்தன என அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் புதிய அரசமுறை கடன் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மற்றும் கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டிருந்தால் பொருளாதார சவாலை வெற்றிக் கொண்டிருக்கலாம்.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டிருந்தால் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்திருக்காது.
இவ்வாறான பின்னணியில் தான் நாங்கள் கடந்த மார்ச் மாதம் 03ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்தோம். ஆனால் பெறுபேறு நாங்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்

நாட்டு மக்கள் சாதாரண நிலையில் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை நெருக்கடியான நிலையில் விரும்பியோ,விரும்பாமலோ,ஏற்றுக் கொள்ளும் நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். அரச நிறுவனங்களை விற்று வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டு, மீண்டும் கடன் பெற்று சுகபோகமாக வாழும் திட்டங்களை மாத்திரம் செயற்படுத்த முயற்சிக்கிறார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படும் போது மக்களுக்கான இலவச சேவைகள் தனியார் மயப்படுத்தும் நிலை ஏற்படும்.

நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு நிலையான தீர்வு காணும் திட்டம் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *