யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் ஐக்கிய ஊழியர் சங்கம் யாழ். சாலை கோண்டாவில் செயலாளர் விஜிதரன் தெரிவிக்கையில்,
24.11.2022 அன்று எமது சாரதியான எஸ்.கெங்காதரன் 764 பாதை வழியாக சென்றிருந்த போது இனந்தெரியாத நபர் ஒருவரால் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
25.11.2022 அன்று எமது அதிகாரிகளின் கோரிக்கைகைக்கு இணங்க, அந்த நபர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே விடுவிக்கபட்டார்.
இதற்கு எதிராக எங்கள் 6 தொழிற்சங்கள் இணைந்து யாழ்.சாலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தோம். கத்தி குத்து வாங்கியவர் வைத்தியசாலையிலும், குத்தியர் வெளியிலும் உள்ளார், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இது தொடருமானால் நாளைய தினமும், அதாவது முடிவு வராத பட்ஷத்தில் வட பிராந்திய 7 சாலைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும்.
இதனால் புறக்கணிப்பில் பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையினர், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர். இதற்கு நாங்கள் மனம் வருந்துகிறோம்.
இனி மேல் இவ்வாறானவை நடைபெறாமல் இருக்க எமது தொழிலார்களின் பாதுகாப்பு கருதி இவ்வாறன பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதனை கூறிக்கொள்கிறோம்.