உயிர்க்காப்பு பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்த 33 பேருக்கான சான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
உயிர்க்காப்பு நடவடிக்கை பொறுப்புவாய்ந்த தொழிலாக காணப்படுகின்றது. இத்துறையில் பயிற்சிகள் பெற்றவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் சிறந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தொழிலின் கெளரவம் பேணும் வகையில் செயற்படுவதுடன் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது. இலவசமாக கிடைக்கப்பெற்ற இப் பயிற்சியின் ஊடாக மாவட்ட மக்களின் பாதுகாப்புக்கு ஏற்றால்போல் பங்களிப்பினை வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்பாடநெறிக்கு நேர்முகத் தெரிவு மூலம் பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ,திருகோணமலை மெக்கேசர் நீச்சல் தடாகத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், இலங்கை உயிர்காப்பு சங்க செயலாளர் சமீர ஜீவன்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.