நாணய பரிமாற்ற வசதி மூலம் இலங்கைக்கு உதவியதன் பின்னர், தம்மிடமிருந்து அதே வகையான உதவிகளைப் பெறுவதற்கு பல நாடுகள் தம்மை தொடர்பு கொள்ளவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பிரதமர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் தமது உரையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2021 மே மாதத்தில், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவும் வகையில் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை பங்களாதேஷ் அனுமதித்தது.
பங்களாதேஷ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றால் ஆகஸ்ட் 23 ஆம் திகதி இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷிலிருந்து நாடொன்றுக்கு வழங்கப்பட்ட முதல் கடன் இதுவாகும்.
இந்த நிலையில் பல நாடுகளின் தலைவர்கள் என்னை தொடர்புகொண்டனர். நான் அவர்களுடன்
பேசினேன்.
நான் அவர்களுக்கு அடிப்படை யதார்த்தத்தை விவரித்தேன். நாங்கள் எங்கள் பாதீட்டை உருவாக்குகிறோம், பிற மூலங்களிலிருந்து பாதீட்டுக்கு ஆதரவைப் பெறுகிறோம். இந்த நேரத்தில், எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நாம் அவசரமாக சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.