வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து!

இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பணிப்புறக்கணிப்பிற்கு தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த போராட்டம் வடபிராந்திய ரீதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *