
கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்று காணாமல் போன வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல் 64 நாட்களின் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 திகதியன்று மாலை 4.30 மணியளவில் கிடைத்துள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அந்தமான் தீவிலிருந்த தமது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் அதில், மீனவர்கள் படகுடன் மீட்கப்பட்டு தற்போது அந்தமான் கடல் பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக காணாமல் போன மீனவர் உமர்தீன் அசன் அலி என்பவரின் மகன் முஜாஹித் தெரிவித்தார்.
குறித்த தகவல் தொடர்பில், மீனவர் சங்கம் மற்றும் துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் முஜாஹித் மேலும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் உறவினர்களை காணாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதே எங்களுக்கு உயிர் வந்துள்ளது.
அவர்களை கவனமாக எங்களது வீடுகளுக்கு அழைத்து வரும்படி வேண்டுகோளும் விடுக்கின்றோம், எனவும் அவர் கூறியுள்ளார்.