_6385ac8b09a38.jpg)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து , இருவரும் இன்றைய தினம் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு தவணைகளின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கினை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.