இராணுவத்தினர் வசமுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும்- சபையில் சிறீதரன் எம்.பி கோரிக்கை!

கடந்த கார்த்திகை.27 தமிழ்த்தேசிய மாவீரர் நாளில், வடக்கு, கிழக்கிலுள்ள பெரும்பாலான மாவீரர் துயிலுமில்லங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரட்சியோடு மாவீரர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன.

எனினும், இதுவரை இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையில் படைமுகாம்களாக கட்டமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம், யாழ்ப்பாணம் கோப்பாய், கொடிகாமம் மற்றும் எள்ளங்குளம் துயிலுமில்லங்கள்,  வவுனியா ஈச்சங்குளம் துயிலுமில்லம், முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் ஆலங்குளம் துயிலுமில்லங்கள், கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லம் உள்ளிட்ட பல மாவீரர் துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்ட தமது பிள்ளைகளின் நினைவிடங்களில் நின்று அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அந்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோரது உணர்வுகள் மறுக்கப்பட்டுள்ளமை மிகப் பாரதூரமான விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய (28) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்தியாகம் செய்த தமது பிள்ளைகளை நினைந்துருகும் வழிவகையற்றிருக்கும், மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களது மனக்காயங்களுக்கும், அவர்களது ஆற்றாமைகளுக்கும் ஆறுதலளிப்பது, அமைதி தருவது, நம்பிக்கையை ஊட்டுவது, இறந்தவர்களை நினைவு கூரும் அவர்களின் அடிப்படை உரிமையொன்றே ஆகும்.

அவ்வுரிமை என்பது ஒவ்வொரு குடும்பத்தவர்களதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத் தழுவியது என்பதால் உணர்வுரீதியான அத்தகைய பிரார்த்தனைகளையும், சடங்குகளையும் அவர்கள் மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களையும் விடுவித்து, மக்கள் மயப்படுத்த வேண்டுமென்று இந்த உயரிய சபையினூடாக கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *