யாழில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்- விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

மானிப்பாய் பகுதியில் இளைஞன் மீது இராணுவம் மற்றும் விசேட அதிரடி படை பொலிஸார் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் அலுவலகம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மானிப்பாய்  சந்தியில்  திங்கட்கிழமை(28) இரவு சென்றுகொண்டிருந்த  இளைஞர் மீது அப்பகுதியில்  கடமையில் நின்றிருந்த  இராணுவ மற்றும் விசேட அதிரடி படை பொலிஸாரால்  தாக்கப்பட்டமை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், செய்திகளை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் அலுவலகம்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக தாக்குதலுக்குள்ளான நபரின் வாக்குமூலம் செவ்வாய்க்கிழமை(29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து பதிவு செய்யப்பட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட மருத்துவ அறிக்கையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் ஆலடி சந்தியில் திங்கட்கிழமை(28) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை , வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார்.

பொலிஸார் வழிமறித்தபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தொடர்ந்து செல்லவே அவர்களை வழிமறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, ” தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது” என கூறியுள்ளார்.

பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினவி முரண்பட்ட போது , பொலிஸாருக்கும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர்.

அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

பின்னர் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *