அடுத்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் கடினமான கட்டத்தை இலங்கை அணி எதிர்கொண்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தற்போதைய, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இலங்கை அணி எதிர்பார்க்கிறது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லேகலையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டதையடுத்து, இரண்டு அணிகளுக்கும் தலா 5 சுப்பர் லீக் புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, 115 புள்ளிகளை பெற்று உலகக்கிண்ணத்துக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி தனக்கான (7 ஆவது) இடத்தை உறுதிசெய்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் தரவரிசையில் ஏனைய 7 அணிகள் 2023 தொடருக்கு நேரடியாக நுழையும்.
கடைசியாக மீதமுள்ள நேரடி நுழைவு (8 ஆவது) இடத்திற்கு தகுதிபெறுவதற்கு, இரண்டு முறை சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இலங்கையும் உள்ளது.
இந்தியாவுடன், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அடுத்த ஆண்டு உலகக்கிண்ணத் தொடருக்காக நேரடியாக நுழைவதை உறுதி செய்துள்ளன.
10 அணிகள் கொண்ட உலகக் கிண்ணத்தில் இறுதி இரண்டு (9 மற்றும் 10) இடங்களுக்கு, நேரடியாக தகுதி பெறாத மீதமுள்ள நாடுகள், இணை அணிகளுடன் தகுதிகாண் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இறுதி சூப்பர் லீக் தரவரிசைக்கான இறுதி திகதி 2023 மே 31 ஆகும்.