
வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சத்தியக்காடு மீன் சந்தை கட்டட திறப்புவிழாவிற்கு கல்வெட்டில் பெயர்கள் பதிவிடுவதில் உருவாகிய முரண்பாடு காரணமாக, குறித்த சந்தைப் பகுதி அமைந்துள்ள 2ம் வட்டார உறுப்பினர் இதயகுமாரன் அவர்கள், இனிமேல் சபையின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தான் விலகுவதாக கடந்த கூட்டத்தில் தெரிவித்துவிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் இன்றையதினம் (29) சபைக்கு சுகயீன விடுமுறை கடிதத்தினை அனுப்பியிருந்தார். அதனையடுத்து தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் கடிதத்தினை சபையில் வாசித்தார்.
சபை உறுப்பினர்களையும் கௌரவ சபையையும் அவமதித்துவிட்டு, சபை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக கூறியவர் எவ்வாறு சுக்யீன விடுமுறை கடிதம் வழங்குவது என கூறி சபையில் அமளி துமளி ஏற்பட்டது.
அதனையடுத்து, குறித்த உறுப்பினர் இதுவரை பதவி விலகல் கடிதம் சபையில் சமர்ப்பிக்கவில்லை. எனவே அவர் உத்தியோகபூர்வமாக சபை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியதாக கருத முடியாது.
எனவே இதுதொடர்பில் விளக்கம் கோரி குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கடிதம் அனுப்புமாறும் அதனைத்தொடர்ந்து அவரது சுகயீன விடுமுறைக் கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த விடயத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.