தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறை இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது – செல்வம்

தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தில் இனப் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாக அவதானம் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக தீர்வு என கருத்து வெளியிடுவது குறித்தும் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி வெளியிட்டார்.

சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி குழு பற்றி தற்போது பேசுவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் ஒற்றுமை இல்லை என்பதால் தீர்வு சாத்தியமற்றது என குறிப்பிடும் நிலையை தமிழ்த் தரப்புக்கள் தோற்றுவிக்க கூடாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply