உலக எய்ட்ஸ் தினமும் இலங்கையும்!

உலகெங்கிலும் இன்று (மார்கழி1)  உலக எய்ட்ஸ் தினம் நினைவுகூறப்படுகின்றது.

இந்த ஆண்டு ‘சமத்துவத்தை காப்பாற்றுங்கள்’ என்ற  கருப்பொருளோடு உலக எய்ட்ஸ் தினம் நினைவுகூறப்படுகின்றது.

அந்தவகையில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் பிரச்சாரத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ஜனக வேரகொட தெரிவித்தார்.

உலக நாடுகளைப் பொறுத்தவரையில் உலக சனத்தொகையில் சுமார் 3 கோடி 80 இலட்சம் மக்களுக்கு மேல் எச். ஐ. வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றார்கள். உலகத்தில் தென் ஆபிரிக்காவே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன. இலங்கையில் எச்.ஐ.வி உடன் 4000 இற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர் என புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நோய்த்தடுப்பு யுத்திகள் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பெற்றிருந்த போதிலும், தாங்கள் எச்.ஐ.வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைளில் இறங்குகின்றனர் என  எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் எய்ட்ஸ் நோய் உலகிற்கு ஓர் அச்சுறுத்தல். இந்நோயானது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமே முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *