மனிதாபிமான அடிப்படையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பை ரத்துச்செய்யுமாறு கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறித்து சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், மீண்டும் மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பது எந்த வகையில் நியாயமானது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில், பொருளாதாரப் பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து மீளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எனினும் அதற்காக மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பது என்பது மனிதத் தன்மையற்ற செயல் என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

ஏற்கனவே பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்யமுடியாமல், மாணவர்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்

எனவே நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்து, மின்சாரக்கட்டணங்களை அதிகரிப்பதை ரத்துச் செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சரும், சபை முதல்வருமான சுசில் பிரேம்ஜயந்த, மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பதற்கு தாம் இணங்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

இந்தக் காலத்தில், மின்சார விநியோகத்தை தடை செய்யவும் முடியாது. அதே போன்று மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவும் முடியாது.

எனவே இது குறித்து நியாயமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை அமைச்சரவைக்கு தெரியப்படுத்தவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Leave a Reply