இணையவழி குற்றங்களை தடுக்கும் சர்வதேச ஒப்பம் – முதல் தெற்காசிய நாடாக கையெழுத்திட்ட இலங்கை!

புடாபெஸ்ட் சைபர் குற்ற சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நெறிமுறையில் கைச்சாத்திட்ட முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சைபர் கிரைம் எனப்படும் இணைய வழிக் குற்றம் தொடர்பான சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையான புடாபெஸ்ட் சமவாயம் உருவாக்கப்பட்டது.

இந்த நெறிமுறையில் இலங்கை, குரோஷியா, மோல்டோவா, ஸ்லோவேனியா, உக்ரைன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. இதன் மூலம், 30 நாடுகள் தற்போது இந்த நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ளன.

சேவை வழங்குநர்கள் மற்றும் பதிவாளர்களுடன் நேரடி ஒத்துழைப்பு, பயனர் தகவல் மற்றும் பரிமாற்ற தரவுகளை பெறுவதற்கான பயனுள்ள வழிமுறைகள், அவசரநிலைகள் அல்லது கூட்டு விசாரணைகளில் உடனடி ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த நெறிமுறை கொண்டுள்ளது.

தரவு பாதுகாப்புகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறைக்கு இந்த நெறிமுறையானது உட்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply