15 வயது மாணவியை துஷ்பிரயோகப்படுத்திய 24 வயது ஆசிரியர்!

பன்னல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் டியூஷன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த சந்தேகநபர் தங்கொடுவ, வென்னபுவ, மகும்புர உட்பட பல பகுதிகளில் விஞ்ஞான பாடம் நடத்தும் டியூஷன் ஆசிரியராவார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர், டியூஷன் வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவின் ஊடாக மாணவியின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பன்னிப்பிட்டியவில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட மாணவியும் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே இவருக்கு பிணை வழங்குமாறும் அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம், வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி, கண்டறிந்த உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply