205 கிலோ வெங்காயம் 9 ரூபாய்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்

இந்தியாவின் கர்நாடகத்தில் விவசாயியிடமிருந்து மொத்தவிலைக் கடைக்காரர் ஒருவர், 205 கிலோ வெங்காயம் பெற்றுக்கொண்டு வெறும் 9 ரூபாய்க்கு ரசீது கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெங்காயத்தை விற்பதற்காக விவசாயி 415 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்ற நிலையில் இவ்வாறான சம்பவம் நிகழ்ந்துள்ளமை தொடர்பில் பல்லரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள யஷ்வந்த்பூர் பகுதியில் மொத்தவிலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இதனிடையே திம்மப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாவடெப்பா ஹல்லிக்கேரி என்ற விவசாயி தான் கொள்முதல் செய்த வெங்காயத்தை மொத்தவிலைக் கடைக்கு கொண்டுசென்றுள்ளார்.

மாநிலத்தில் வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளதால், அதனை கடாக் மாவட்டத்திலிருந்து 415 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெங்களூரு அருகேவுள்ள யஷ்வந்த்பூருக்கு கொண்டுவந்துள்ளார். வெங்காயங்களை எடுத்துக்கொண்ட வியாபாரி விவசாயிக்கு ரசீது கொடுத்துள்ளார்.

அந்த ரசீதில் வெங்காயம் விலை குவிண்டாலுக்கு ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமைக்கூலிக்காக ரூ.24 கழித்துக்கொண்டு ரூ.377 கொடுக்க வேண்டும் என ரசீதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மொத்த விலையில் ரூ.8.36 என ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ரசீது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாகவே தக்காளி, வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், மொத்த கொள்முதல் செய்த விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 2 – ரூ.10 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் இழப்பை சந்திக்க நேரிடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply