மாநகரசபையினர் கல்லூண்டாய் பகுதியில் குப்பைகளை கொட்ட வரும்போது மேற்கொள்ளப்படும் முறைகேடான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும் அவற்றினை தடுப்பதற்கும் கல்லூண்டாய் வீதிக்கு சி.சி.டி.வி கேமரா பொருத்துவதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.
ரூபா 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த கேமெராக்களை பொருத்தவுள்ளதாக அவர் அப்பகுதி மக்களுக்கு உத்தரவாதமளித்தார்.
யாழ். மாநகர சபையினர், கல்லூண்டாய் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றையதினம் (02) போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும் போது அவர் இந்த விடயத்தினை அப்பகுதி மக்களுக்கு கூறினார்.
தவிசாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மாநகரசபையினரின் செயற்பாடுகளால் கல்லூண்டாய் பகுதி பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மாநகரசபையின் ஊழியர்களை மக்கள் பல தடவைகள் நேரடியாக இனங்காட்டிய நிலையிலும் எம்மால் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியவில்லை.
எனவே சி.சி.டி.வி கேமெராக்களை பொருத்தினால் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.