பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைக்கு பொலிஸ் தலையிட முடியாது: மனுஷ நாணயக்கார

கொழும்பு,டிச 03

பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படும் தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க பொலிஸார் தலையிட முடியாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படும் தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தொழில் திணைக்களங்களே தீர்க்க வேண்டும், மாறாக பொலிஸார் இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை தோட்ட நிர்வாக அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து தீர்க்க முயல்வதாக குற்றஞ்சாட்டினர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தாம் நேரடியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க உள்ளதாகவும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

இதேவேளை, சபரிமலைக்கு செல்லும் அடியாளர்களுக்கான வீசா கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் காப்புறுதி பெற வேண்டும் என்ற கட்டாய நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.

சபரிமலைக்கு அடியார்கள் விரதமிருந்து செல்லும் போது காப்புறுதி செய்யப்படுவது மதக்கோட்பாட்டுக்கு முரணானது எனவும் வடிவேல் சுரேஷ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply