தென்னிலங்கைக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படும் தமிழ்த் தரப்பின் நிபந்தனைகள்!

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழ்த் தரப்புக்கள் சமஷ்டி அடிப்படையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜெஹான் பெரேரா, ஆரம்பத்திலேயே தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் தமிழ்த் தரப்பு நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு தமிழ்த் தரப்புக்கள் செய்யுமாக இருந்தால் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதோடு ஆளும்கட்சியின் ஆதரவு விலகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றும் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

ஏற்கனவே ஒற்றையாட்சி முறைமை என்றால் தமிழர்கள் சந்தேகப்படும் அதேவேளை சமஷ்டி என்றால் சிங்களவர்களும் கடுமையான எதிர்ப்போக்கான நிலைமையில் உள்ளார்கள் என்றும் ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *