சவூதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறுபவர்கள் மத்தியில், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பணியாளர்களும் உள்ளதாக சவூதி அரேபிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலிட் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அண்மையில் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். அதன்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு சவூதி அரேபியாவில் பல வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தொழில் பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் தாம் பரிந்துரைத்ததாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான எதிர்கால முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தநிலையில் இலங்கைக்கு சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உதவிகளை பாராட்டிய சபாநாயகர், இலங்கை எப்போதும் சவூதி அரேபியாவுடன் நட்புறவுடன் நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.