இலங்கை மின்சார சபை எட்டு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்ற கூற்றை நிராகரித்த சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, அவ்வாறான விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றார்.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எவரும் அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை எட்டு பிரிவுகளாகப் பிரிக்கும் ஆணை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையில் அத்தகைய விடயம் விவாதிக்கப்படவில்லை. சில ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை எட்டு அலகுகளாகப் பிரிக்கப்படும் என நீங்கள் ஊகங்களைச் செய்ய முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் தான் கலந்து கொண்ட குழுக் கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாளை பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

