கார்த்திகை தீபத்திருவிழா: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை, டிச 05

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மலர்கள் வரழைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி முன்பு 2-ம் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்கள், கரும்பு மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதேபோல், தங்க கொடி மரம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் வாழை மரம் மற்றும் தென்னங்கீற்று கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும் முகப்பு பகுதியில் சிவலிங்கம் மற்றும் 2 நந்திகளை தத்ரூபமாக வடிவமைத்து மலர்களைக் கொண்டு தோரணம் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் மகா தீப தரிசன மண்டபமும் தென்னங்கீற்றுகளை கொண்டு பின்னப்பட்ட தட்டுகள் மற்றும் தோரணங்கள் மூலமாக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு உள்ள மண்டபமும் மலர்களால் அலங்கரித்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *