'மே 9' வன்முறை விசாரணை அறிக்கைக்கு என்ன நடந்தது? சபையில் கேள்வியெழுப்பிய எம்.பி.

இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடும் போது அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த மே 09 ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியிடம் மேற்படி குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை

நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக இந்தக் குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே, அதை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்” – என்றார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. குழுவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

தற்போதைய ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவில்லை. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்” – என்று குறிப்பிட்டார்.

Leave a Reply