கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்களுக்கு பெருந்தொகை தாமதக் கட்டணம்

கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள இரண்டு கப்பல்கள் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக துறைமுகக் கடற்பரப்பில் தரித்து நிற்கின்றன. அவற்றுக்கான கட்டணம் இன்னும் டொலர்களில் செலுத்தப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கப்பல் ஒன்றுக்கு நாளாந்தம் ஒன்றரை லட்சம் டொலர் வீதம் தாமதக் கட்டணம் செலுத்தப்படுவதாக எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்க பிரமுகர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு மூன்று லட்சம் ரூபா வரையான பெருந்தொகைப் பணம் செலுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

அதே நேரம் கடந்த 58 நாட்களாக சப்புகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருப்பதன் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தரையிறக்கப்பட்ட 99 ஆயிரம் மெட்ரின் தொன் கச்சா எண்ணெய் இதுவரை சுத்திகரிக்கப்படாமல் எண்ணெய்த் தாங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைக்கு வருகை தந்துள்ள கப்பல்களில் 95 ஆயிரம் மற்றும் 96 ஆயிரம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் எடுத்து வரப்பட்டுள்ள போதிலும், தற்போதைய நிலையில் ஒரு லட்சத்தி முப்பதாயிம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய்யை மட்டுமே தரையிறக்கி களஞ்சியப்படுத்த முடியும் என்றும் எண்ணெய்த் தாங்கிகளில் பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதே அதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில் எரிபொருள் கப்பல்களை வரவழைத்து அவற்றுக்கு தாமதக் கட்டணம் செலுத்தும் விடயத்தை ஒரு மோசடி வழியாக சிலர் கையாளுவதாகவும் ஆனந்த பாலித குற்றம் சாட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *