பொலிஸ் வேடமணிந்த 3 பேர் வீட்டொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளனர்.
கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (06) இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டினுள் நுழைந்த சந்தேக நபர்கள் அங்கிருந்த தங்கப் பொருட்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று காலை குறித்த வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள் மூவருடன் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் பொலிஸார் என கூறி வீட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்த நபர்களை மண்டியிடச் செய்து அவர்களிடம் இருந்த தங்க வளையல், 02 தங்க மோதிரங்கள், 02 தங்க சங்கிலிகள், 02 பென்டன்ட்கள், 355,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் ஏனைய சொத்துக்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்தின் பெறுமதி 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.