தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு அரசும், கூட்டமைப்பும் இணைந்து சபாநாயகரிடம் கோரிக்கை!

வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

35 அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், டயான கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று பிற்பகல் சபாநாயகரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில், எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் வரவு – செலவுத் திட்ட குழு விவாதத்தை பாரம்பரியமாக ஆரம்பிக்க வேண்டும் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்ததால், அது தவறவிட்டதாகவும், இதனால் அந்தந்த அமைச்சகங்களின் செலவுத் தலைப்புகளில் எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் உடனடி கவனம் செலுத்தி தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *