இடதுசாரி சிந்தனையுள்ள மக்களாட்சியை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்கொண்டு செல்ல முடியுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்போம் என்று கூறியது.
ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று என்ன நடக்கின்றது. எல்லாத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கூறினார்கள்.
ஆனால், இன்று இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்றவாறு ஆட்சி நடைபெறுகின்றது. ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்றார்கள்.
மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வெளியில் சுற்றித் திரிகின்றார்கள். நாட்டின் சகல மக்களும் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
இடதுசாரி சிந்தனையுள்ள மக்களாட்சியை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்கொண்டு செல்ல முடியும்.
அதற்கான நேரம் தற்பொழுது நெருங்கியிருக்கிறது. அனைத்து இன மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.