‘நீ கொலை செய்யப்படுவாய்’ என கொலை மிரட்டல்

நாம் சஹ்ரான் அணியைச் சேர்ந்தவர்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் நீ கொலை செய்யப்படுவாய். வாகனத்தில் குண்டுவைத்து, வெடிக்கவைக்கப்படுவாய்” என்றெல்லாம் கொலை அச்சுறுத்தல் விடுத்து, தனது பேஸ்புக்கின் ஊடாக குரல்பதிவை அனுப்புகின்றனர் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பாதுகாப்புக் கருதி, குறித்த குரல்பதிவு உள்ளிட்ட சகலஆதாரங்களுடன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் நான் முறையிட்டுள்ளேன். இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிடுமானால், அதற்கான முழுப்பொறுப்பையும் எமது சபையில் உள்ள மூவர் பொறுப்பேற்கவேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு, இனவாத விதையை விதைத்து இன வன்மத்தை தூண்டிய எமது சபை முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர், தமது சமுகத்தின்முன் செல்லாக்காசாகி, தற்போது கூனிக்குறுகி நிற்கின்ற நிலை உருவாகியுள்ளது.

இனியாவது இன நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என்ற நாமத்தோடு உலாவரும் அமைப்புகள் இப்படியான சந்தர்ப்பத்தில் உடனடியாகத் தலையிட்டு, உண்மை – பொய்யை அறிந்து, மக்களுக்கு சரியான தகவலை எடுத்தியம்ப வேண்டும் . இன முறுகலை, இன வன்மத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்றார்.

Leave a Reply