கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றை பாதுகாப்பு படையினர் இன்று திடீரென சோதனைக்கு உட்படுத்தினர்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு படை முகாம்களின் கட்டளைத் தளபதியின் வழிநடத்தலில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 வது சிங்க படைப்பிரிவு, விசேட அதிரடிப்படையினர், மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து சந்தேகத்கிடமான வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது ,வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை இராணுவத் தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இடியன் துப்பாக்கி 3, கட்டுத் துப்பாக்கி 11, இடியன் துப்பாக்கியின் மரப்பிடிகள் (பட்) 5, ரீ -56 ரவைகள் 250, ஈயக் குண்டு 8, பட்டாசுகள் 16, வாள்கள் 2, கசிப்பு உற்பத்திப் பொருட்கள், பன்றி இறைச்சி 8 கிலோகிராம் மற்றும் உடும்புத் தோல் 1 ஆகியவற்றுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.