விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு புகையிரத பாதைகள் மூடப்படுவதால், இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரத பாதைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புகையிரத பாதைகள் சுமார் 06 மாதங்களுக்கு திருத்தம் செய்யப்பட உள்ளதால் யாழ் குடா நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர், தற்போது நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், வருகின்ற ஆண்டும் அதிகளவான சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இதனால் யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், எனவே புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டால், பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே சுற்றுலா பயணிகளை விமானம் மூலம் அழைத்து வருவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டில் சிவில் விமான சேவைகள் குறைவாக உள்ள நிலையில், புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டால் சுற்றுலா துறை மேலும் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.