ஹிஷாலினியை வேலைக்கு அனுப்பிய அவரின் பெற்றோரும் தப்பிவிட முடியாது

ஹிஷாலினி பணிக்கு அமர்த்தப்படும் வயதில் இல்லை என்பது தெரிந்தும் அந்தச் சிறுமியை பணிக்கு அனுப்பியது மிகப்பெரிய குற்றம். எனவே அவ்வாறு பணிக்கு அனுப்பிய ஹிஷாலினியின் பெற்றோரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசு தரப்பு ஆதரவாளருமான டயனா கமகே தெரிவித்தார்.

“ரிஷாத் பதியுதீன் மீது இன்று மரியாதை இல்லை. எவ்வாறு இனியும் அவர் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்? அவர் எவ்வாறு இன்னொரு பிள்ளைக்காக, பெற்றோருக்காகப் பேச முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்குப் பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது தெரிந்துகொண்டும் எப்படி அவரால் இருக்க முடிந்தது?

Advertisement

ஹிஷாலினியின் மரணத்துக்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொறுப்புக்கூறியாக வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறுவர் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ள நிலையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துதல் என்பவை பேரலையாக இலங்கையைத் தாக்கிக்கொண்டுள்ளது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்த விசாரணைகள் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளைப் கறுப்புப்பட்டியலில் போடும் முறைமையொன்று உருவாக வேண்டும். மனநோயாளர் பட்டியலில் அவர்களை இணைக்க வேண்டும். தமது பிள்ளைகளிடம் கூட அவர்கள் செல்ல முடியாத சட்டமொன்று கொண்டுவர வேண்டும். வெளிநாடுகளில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது” – என்றார்.

Leave a Reply